உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை அமர்வில் வழக்குகளை அவசரமாக பட்டியலிட கோருவதற்கும், வழக்குகளில் வாதாடுவதற்கும் மூத்த வழக்கறிஞர்களுக்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்கு ஜூன் 1 முதல் ஜூலை 12 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், விடுமுறை அமர்வுகள் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும். இந்த விடுமுறை காலத்தில் ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு அமர்வுகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அமர்வின் முதல் நாளில், நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான (நீதிபதி பி.பி. வராலே உடன்) அமர்வில் ஒரு வழக்கில் மூத்த வழக்கறிஞர் வாதாட முன்வந்தபோது, அமர்வு அவரைத் தடுத்து, இளம் வழக்கறிஞர்கள் மட்டுமே வாதிட அனுமதிக்கப்படுவர் என்றும் அவர்களது வாதத்தையே கேட்போம் என்றும் தெரிவித்தது.
அந்த மூத்த வழக்கறிஞர் புதிய உத்தரவு தெரியாததால் இன்று மட்டும் அனுமதிக்க வேண்டும் என கோரியதை அமர்வு ஏற்று, நாளை முதல் எந்த மூத்த வழக்கறிஞரும் ஆஜராகி வாதாடக் கூடாது என தெளிவுபடுத்தியது. அதே நேரத்தில், இளம் வழக்கறிஞர்களுக்கு தேவையான உதவிகளை மூத்தவர்கள் வழங்கலாம் என்றும் கூறப்பட்டது.
மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டிய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படாது; விடுமுறை முடிந்து வழக்கமான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கிய பின் அவை விசாரணைக்காக பட்டியலிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி சஞ்சய் கரோல் தலைமையிலான கோடை அமர்வும் இதே உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டு, இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





