பாலியல் தொழிலுக்கு திணிக்கப்பட்டு மீட்கப்படும் பெண்களை குற்றவாளிகளாகக் கருதக் கூடாது; அவர்கள் கண்ணியமாக மறுவாழ்வு தொடங்க முழு உரிமை பெற்றவர்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளிலும் அதன் பிந்தைய செயல்முறைகளிலும் போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாலியல் சுரண்டலுக்காக கடத்தப்படும் பெண்களை மீட்டு, பாதுகாப்பான மற்றும் மரியாதையான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனக் கோரி ‘பிரஜ்வாலா’ என்ற சமூக நல அமைப்பு தொடர்ந்த பொதுநல வழக்கில் இந்த உத்தரவு வந்தது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி “பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புத் திட்டம்” என்ற வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
இந்த திட்டம் ஆறு அடிப்படை கோட்பாடுகளை முன்வைக்கிறது: மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கு முன்னுரிமை; மீட்கப்பட்ட பெண்களை பாதிக்கப்பட்டவர்களாகவே கருதி குற்றவாளிகளாக நடத்தாமை; அவர்களின் சுய சம்மதமின்றி மறுவாழ்வு நடவடிக்கைகளை வலுக்கட்டாயமாக திணிக்காமை; அவப்பெயர்/பாகுபாடு ஏற்படாத சூழல் உருவாக்கம்; மாநில அரசுகள் மூலம் அச்சுறுத்தல்களில் இருந்து முழு பாதுகாப்பு; மற்றும் அடையாளம், தனியுரிமை அனைத்திடங்களிலும் பாதுகாப்பு.
மேலும், போலீசாருக்கான கட்டுப்பாடுகளாக, மீட்கப்பட்ட பெண்களை இரவு நேரத்தில் போலீஸ் நிலையம் அல்லது கடத்தல் தடுப்பு பிரிவு மையங்களில் தங்க வைக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. பெரியவர்களை மாஜிஸ்திரேட் முன்பும், சிறார்களை குழந்தைகள் நல குழு முன்பும் ஆஜர்படுத்த வேண்டும்; வயது குறித்து சந்தேகம் இருந்தால் குழந்தையாகவே கருத வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்களா என்பதைக் காரணமாக்கி பாதுகாப்பை குறைக்கக் கூடாது; மீட்கப்படும் பெண்களை புகைப்படம்/வீடியோ எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான கடத்தல் தடுப்பு பிரிவுகளை இனி டி.எஸ்.பி. அந்தஸ்து அதிகாரி மட்டுமே வழிநடத்த வேண்டும்; ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது இரு பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மீட்புப் பணியின்போது அனைத்து இடங்களையும் தீவிரமாக சோதிக்கவும், கடத்தலாளர்கள், வாங்குபவர்கள், விற்பனையாளர்கள், நிதியுதவி செய்வோர் உள்ளிட்ட விவரங்களுடன் தரவுத்தளம் உருவாக்கி மாதந்தோறும் ஏ.டி.ஜி.பி.-க்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மனித கடத்தலைத் தடுக்க மத்திய அரசு விரிவான சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அதே நேரத்தில் சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்தோரை தேவையின்றி மீட்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி அலைகழிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.





