கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகத்தின் பல மாவட்டத் தலைமையிடங்களில் திங்கள்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூரில் பேரணியாக வந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் கைது செய்ய முயன்றபோது விவசாய சங்கத் தலைவர் பழனியப்பன் உள்ளிட்டோருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் விவசாயிகள் தர்ணாவில் அமர்ந்தனர்.
மற்ற மாவட்டங்களில் நுாதன முறைகளிலும் போராட்டம் நடந்தது. வேலூரில் பட்டை நாமம் தரித்து, வாயில் கருப்பு துணி கட்டியபடி தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
நாகையில் கலெக்டர் அலுவலக வாயிலில் மாலை அணிந்து சடலம் போல் படுத்து, வாய்க்கரிசி போட்டு ஒப்பாரி வைத்து மேளம் அடித்தும் போராட்டம் நடத்தினர். விழுப்புரம் நகராட்சி திடலில் கரும்பை கையில் ஏந்தி, பட்டை நாமம் அணிந்தபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





