சென்னை: தமிழகம் முழுவதும், ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் உள்ள கோவில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும் முக்கிய இடங்களின் எண்ணிக்கையை பதிவு செய்ய போலீசார் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள 1,321 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களின் எல்லைகள் அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. காவல் நிலைய எல்லைக்குள் பள்ளி, கல்லூரி, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள், ஆண்கள்-பெண்களுக்கான விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

மேலும் 26 தலைப்புகளில் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இதில் ரவுடிகளின் வீடுகள், சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள், பிரச்னை அதிகம் நடக்கும் இடங்கள், மென்பொருள் நிறுவனங்கள், ஏரி-குளம்-ஆறு போன்ற நீர்நிலைகள், டாஸ்மாக் கடைகள், கல்லறைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

ஏற்கனவே காவல் நிலையங்களில் உள்ள பதிவுகளை புதுப்பிப்பதற்கும், புதிய இடங்களுக்கு போலீசாரை விரைவாக அனுப்புவதற்கும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக காவல் துறை உயர் அதிகாரிகள் கூறினர்.