உச்ச நீதிமன்றத்தில் ஐந்து புதிய நீதிபதிகளை மத்திய அரசு நேற்று நியமித்தது. இதில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவும் இடம்பெற்றுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க, தலைமை நீதிபதி உட்பட மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் சட்டத்திருத்தம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் ஐந்து பேரை பரிந்துரைத்தது. அந்த பரிந்துரைகளை ஏற்ற மத்திய அரசு, பஞ்சாப்–ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷகீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் ஜம்மு–காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பள்ளி ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்தது.

இந்த நியமனங்களால் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. வி.மோகனாவுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.