மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக ‘உதயசூரியன்’ சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று தங்கள் கட்சிக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், மதிமுகவுக்கு குறைவான இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக கூட்டணியில் உறுதியாக நின்று பல தொகுதிகளில் பணியாற்றியதாக கூறினார். திமுக வேட்பாளர்களை ஆதரித்து 34 தொகுதிகளில் பிரசாரம் செய்ததாகவும், அவற்றில் 24 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த வெற்றியில் மதிமுகவின் பங்களிப்பும் சிறிதளவு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆதரவான வாக்குகளால் மதிமுகவின் இரண்டு எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றதாகவும், இரண்டு இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் வைகோ கூறினார். ஆனால், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், மதிமுகவுக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
தொகுதி ஒதுக்கீட்டு முறை மற்றும் திமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற வற்புறுத்தல் ஆகியவை தமிழகம் முழுவதும் உள்ள மதிமுக தொண்டர்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஒரு தொகுதியில் தங்கள் விருப்ப சின்னத்தில் போட்டியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும், கடைசி நேரத்தில் அதையும் மாற்றி உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று கூறப்பட்டதால் அதை ஏற்க வேண்டியதாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து தொண்டர்களின் உணர்வுகள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துகள் மதிமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்றும் வைகோ கூறினார்.





