சென்னை: நகர்ப்புறங்களில் சுகாதாரம் மற்றும் பசுமை பரப்பை முன்னுரிமையாகக் கொண்டு, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஆறு மாதங்களில் கணிசமான முன்னேற்றம் காணும் வகையில் பணியாற்ற முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், நகர்ப்புறங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே முக்கிய நோக்கமெனவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தினமும் காலை நேரங்களில் கமிஷனர் முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரை கள ஆய்வுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின்போது குப்பை, கட்டடக் கழிவு, அனுமதியற்ற போஸ்டர்கள் போன்றவை இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சாலையோரம் மற்றும் சென்டர் மீடியன்களில் பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து சேகரித்து, ஒரே இடத்தில் கொட்டாமல் மறு சுழற்சி மற்றும் அறிவியல் முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை முறையாக செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். முதல்வர் விஜயும் பல இடங்களில் நேரடி ஆய்வுக்கு செல்ல உள்ளதால், அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.





