தமிழ்நாடு–கேரள எல்லையில் உள்ள அகஸ்திய மலை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், அடையாளம் காணப்பட்ட 118 ஆக்கிரமிப்பாளர்கள் மீது துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் இடம்பெற்றிருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

அகஸ்திய மலை பல்லுயிர் பெருக்க நிலப்பரப்பு பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய முக்கியமான வனப் பகுதி. பெரியார் புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகம், களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல வனவிலங்கு சரணாலயங்கள் இதில் அடங்கும். கடந்த சில ஆண்டுகளில் ஆக்கிரமிப்புகளும் சட்டவிரோத கட்டுமானங்களும் அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நடந்த விசாரணையில், தேனி மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கை மேற்கோள் காட்டப்பட்டது. அதில், தேனி மாவட்ட காப்புக் காடுகளில் 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் 5,072 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், இதுவரை 1.8% மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி இன்றி 116 அரசு மற்றும் பொது பயன்பாட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கையின் அடிப்படையில் 118 தனிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அரசு பணியாளர்கள் என்பதே “அதிர்ச்சி” அளிப்பதாகவும் நீதிமன்றம் கூறியது. ராணுவம், போலீஸ், துணை ராணுவம், வனத்துறை, வருவாய் துறை, மின்சார வாரியம், அங்கன்வாடி, பள்ளிக் கல்வித் துறை, பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் உள்ளிட்டோர் இதில் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. இவர்களிடம் இருந்து காடு அழிவுக்கான சுற்றுச்சூழல் இழப்பீட்டை கணக்கிட்டு வசூலித்து ‘கேம்பா’ (CAMPA) நிதிக்கு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் கால அட்டவணையுடன் கூடிய திட்டத்தை மத்திய அதிகார குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்; ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள்/கடைகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி கட்டப்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் ஆறு மாதங்களில் இடித்து அகற்றப்பட வேண்டும்; மேகமலை உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கும் சுற்றுலா விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முடக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில அரசு தாமதித்தால் துணை ராணுவத்தை வரவழைக்க மத்திய அதிகார குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. உத்தரவுகள் நடைமுறையில் உள்ளதா என்பதை மத்திய அதிகார குழு களத்தில் கண்காணித்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; முதல் அறிக்கை ஆகஸ்ட் 28 அன்று சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கு அடுத்த விசாரணைக்கு செப்டம்பர் 1க்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.