புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விமான எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தை கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி வட்டியில்லா முன்பணம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய போர் பதற்றத்தின் பின்னணியில் விமான டர்பைன் எரிபொருள் விலை சுமார் 2.5 மடங்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு தேவையற்ற சுமை ஏற்படாமல் இருக்கவே இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு விமானப் பயணம் முக்கிய போக்குவரத்து முறையாக மாறியுள்ள நிலையில், கட்டணங்களில் கடும் உயர்வு ஏற்படாமல் பாதுகாப்பதே அரசின் நோக்கம் என்றார். உள்நாட்டு விமான சேவைகளுக்கான கட்டண கட்டுப்பாடுகள் விமான நிறுவனங்களின் செயல்பாடுகளை நிலைப்படுத்த உதவினாலும், எண்ணெய் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதே அமைச்சரவை கூட்டத்தில் ரூ.39,290 கோடி மதிப்பிலான 6 முக்கிய திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டில்லி-என்சிஆர் பகுதியில் இயங்கும் பழைய லாரிகள் மற்றும் பஸ்களை அகற்றி, அவற்றுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய வாகனங்களை கொண்டு வருவதற்கான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.9,585 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச விமான சேவைகளில் மேற்காசிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் சில நேரங்களில் நீண்ட வழித்தடங்களில் செல்ல வேண்டிய சூழல் உருவாகி, செலவுகள் அதிகரித்து சேவைகள் பாதிக்கப்படுவதாகவும் வைஷ்ணவ் குறிப்பிட்டார். இந்நடவடிக்கைகள் அந்த அழுத்தங்களில் சிலவற்றை குறைத்து, ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.