சென்னை: தமிழ்நாடு வணிக வரித்துறையில் 171 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த உயர்வு பட்டியல் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த பதவி உயர்வுகள் முழுமையாக தகுதி மற்றும் தகுதிச்சான்றுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும், விரும்பிய இடமாற்றம் அல்லது உயர்வுக்காக எந்தவிதமான பண வசூலும் செய்யப்படவில்லை என்றும் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆட்சி காலங்களில் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வின்போது விருப்ப இடம் பெற லஞ்சம் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால் ஓராண்டுக்கும் மேலாக பதவி உயர்வுகள் தாமதமானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பதவி உயர்வுகளை வெளிப்படையாக வழங்க அனைத்து துறைகளுக்கும் முதல்வர் விஜய் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகளை விரைவில் வழங்க வேண்டும் என பணியாளர்களும் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், 113 வணிக வரி அலுவலர்கள் உதவி ஆணையர்களாகவும், 24 உதவி ஆணையர்கள் துணை ஆணையர்களாகவும், 34 துணை மாநில வரி அலுவலர்கள் மாநில வரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.





