த.வெ.க. உடன் கூட்டணி அமைப்பது குறித்து ம.தி.மு.க. இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை; வரும் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக்குழுவில் விவாதித்து தீர்மானிக்கப்படும் என்று பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே, காவிரியில் மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து ம.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருந்து பிரசாரம் செய்ததாகவும், தி.மு.க. ஆதரவுடன் ம.தி.மு.க. இரண்டு தொகுதிகளில் வென்றதாகவும் அவர் கூறினார். கூட்டணியின் வெற்றிக்கும் ம.தி.மு.க. பங்களித்ததாகவும் தெரிவித்தார்.

கூட்டணியில் சில கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ம.தி.மு.க.க்கு நான்கு தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டதாக வைகோ கூறினார். தங்களின் சின்னத்தில் மேலும் போட்டியிடலாம் என்ற ஆதங்கம் தொண்டர்களிடம் இருந்ததாகவும், அதையே முதன்மைச் செயலர் துரை வைகோ பேசியதாகவும் விளக்கினார்.

தி.மு.க. கூட்டணியில் வென்ற காங்கிரஸ் தலைவர்கள் நன்றி கூட சொல்லாமல் த.வெ.க. பக்கம் சென்றதாகவும், தி.மு.க. மூலம் ராஜ்யசபா எம்.பி. இடம் பெற்ற பின்னர் த.வெ.க. அமைச்சரவையிலும் இடம் பெற்றதாகவும் வைகோ குற்றம்சாட்டினார். த.வெ.க. கூட்டணி குறித்து அவசர முடிவு எடுக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

மேகதாது அணைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த தமிழக அரசு ஒரு நாள் கடையடைப்பு அறிவித்தால், தமிழகம் முழுவதும் எதிர்க்கிறது என்பது கர்நாடக அரசுக்கு தெரியவரும் என வைகோ தெரிவித்தார். மேலும், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை கண்டித்து ஜூன் 7-ஆம் தேதி கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம் என்றும் அறிவித்தார்.