புதிய வீட்டிற்கு வீட்டு வரி விதிப்பை மேற்கொள்ள பணம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிலுவம்பட்டியை சேர்ந்த பூபதி (44) தனது புதிய வீட்டிற்கு வரி விதிக்க நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. அங்கு பணியாற்றும் வருவாய் உதவியாளர் உதயகுமார் ரூ.25,000 லஞ்சம் கேட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரம் பேசியதில் தொகை ரூ.15,000 ஆக குறைந்ததாகவும், முதல் தவணையாக பூபதி ரூ.7,000 வழங்கி, மீதியை பின்னர் தருவதாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பூபதி நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனப் பொடி தடவிய ரூ.8,000 நோட்டுகளை நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் உதயகுமாரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
அந்த பணத்தை அங்கு இருந்த என்.கொசவம்பட்டியை சேர்ந்த தற்காலிக துாய்மை பணியாளர் கலாவிடம் உதயகுமார் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். மறைந்திருந்த போலீசார் உதயகுமார் மற்றும் கலாவை கைது செய்தனர்.





