அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பதவியேற்ற பிறகும் நிர்வாகத்தை விட ‘பஞ்ச்’ வசனங்களோடு ‘ரீல் ஹீரோ’ போலவே அவர் செயல்படுகிறார் என அவர் குற்றம்சாட்டினார்.

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்ட பழனிசாமி, போதைப்பொருள் புழக்கத்தை கேள்வி எழுப்பினால் கொலைதான் பதிலா என கேட்டு, இதுவே மாற்றமா என்றும் சாடினார்.

திருச்சியில் முதல்வர் விஜய் பேசியதை மேற்கோள் காட்டிய அவர், அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதாது; எல்லா ஆட்சிகளிலும் அதே அதிகாரிகள்தான் பணியாற்றுகிறார்கள் என்றார். மாற்றம் என்பது ஆட்சியாளரிடமே வர வேண்டும் என்றும், காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் சட்டம்-ஒழுங்கு பொறுப்பை ஏற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு என்றும் விமர்சித்தார்.

மேலும் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை தொடக்க விழா கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதாக கூறிய பழனிசாமி, முதல்வரின் உதவியாளர் வீட்டுவிழாவுக்காக பெண்கள் பாதுகாப்பை புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார். துாத்துக்குடி அருகே நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, கட்சியினரை கட்டுப்படுத்த முடியாதவர் காவல் துறையை எப்படி நிர்வகிப்பார் என்றும் கேள்வி எழுப்பினார்.