தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நாளை முன்னிட்டு, ‘தினமலர் – பட்டம்’ மாணவர் பதிப்பு 10ம் ஆண்டில் புதிய பகுதிகளுடன் தனது பயணத்தைத் தொடங்குகிறது.

6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் அறிவுத் தேவைகளை கருத்தில் கொண்டு, 12 பக்கங்கள் கொண்ட முழுவண்ண டேபுளாய்டு வடிவில் இந்த நாளிதழ் தயாரிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, கோடிங், எதிர்காலவியல் போன்ற ஏற்கனவே அறிமுகமான பகுதிகள் இந்த கல்வியாண்டிலும் தொடரும்.

இந்த ஆண்டு புதிதாக, யு.பி.ஐ. பரிவர்த்தனை மற்றும் அதன் தொழில்நுட்பத்தை விளக்கும் பகுதி, சோலார் மின்சார உற்பத்தித் துறையின் முன்னேற்றங்களை விவரிக்கும் பகுதி, ராணுவ வளர்ச்சிகளை எடுத்துரைக்கும் பகுதி உள்ளிட்டவை சேர்க்கப்படுகின்றன. மேலும் பார்முலா 1 ரேசிங், தற்கால தகவல் அறிவை மேம்படுத்தும் அம்சங்கள், வங்கித் துறையை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கூறும் பகுதியும் இடம்பெறுகிறது.

சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி மற்றும் கணித வல்லுநர் ராஜேஷ் சடகோபன் இணைந்து வழங்கும் ‘மாற்றி யோசி’ என்ற கணிதப் பகுதி இந்த ஆண்டும் தொடர்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக வாராவாரம் வெளிவரும் இந்தப் பக்கம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரனின் ‘வெங்கியின் பதில்கள்’ அறிவியல் கேள்வி–பதில் பகுதியும், கணித பேராசிரியர் இரா. சிவராமனின் ‘பை’யன் பதில்கள் பகுதியும் தொடரும். ‘தினமலர் – பட்டம்’ திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து பள்ளி நாட்களிலும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.