பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஜூன் 9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்த ஜம்மு–காஷ்மீர் அவாமி ஆக்ஷன் கமிட்டி (ஜே.ஏ.ஏ.சி.) அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் நிர்வாக சீர்கேடுகளை முன்வைத்து ஜே.ஏ.ஏ.சி. தலைமையில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் போராட்டங்களுக்குப் பின்னர், பாகிஸ்தான் அரசு, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மாகாண அரசு மற்றும் ஜே.ஏ.ஏ.சி. இடையே ‘முசாராபாத்’ முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே அதன் முக்கிய நோக்கமாக கூறப்பட்டது.

ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகி பல மாதங்கள் கடந்தும் முக்கிய வாக்குறுதிகள் பல இன்னும் நிறைவேறவில்லை என ஜே.ஏ.ஏ.சி. குற்றம்சாட்டியுள்ளது. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட இறுதி காலக்கெடு கடந்த மாதம் 31-ம் தேதியுடன் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் அரசு தங்களை ஏமாற்றியதாக கூறும் ஜே.ஏ.ஏ.சி., ஜூன் 9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது; இதனால் அப்பகுதியில் மீண்டும் நிலைமை குறித்து அச்சம் எழுந்துள்ளது.