புதுடில்லி: கையிருப்பில் உள்ள தங்கத்தில் இருந்து 12 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.15 லட்சம் கோடி) மதிப்பிலான தங்கத்தை விற்றதாக வெளியான தகவலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மறுத்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்றத் தாழ்வுகள் நிலவிய சூழலில், சில ஊடகப் பகுதிகளில் ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றதாக செய்திகள் வெளியாகின. இந்தக் கூற்றை மத்திய நிதி அமைச்சகமும் நிராகரித்தது.
நிதி அமைச்சகம் குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கைகளின்படி, தங்கக் கையிருப்பு குறையாமல் உயர்ந்துள்ளது. 2025 மார்ச் 31 நிலவரப்படி 879.58 மெட்ரிக் டன்னாக இருந்த ஆர்பிஐ தங்க இருப்பு, இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி 880.52 மெட்ரிக் டன்னாக உயர்ந்து 0.94 மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், தங்கத்தை விற்றதாக வெளியான தகவல்கள் தவறானவை எனக் கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்க இருப்பு விவரங்கள் மாதாந்திர அறிக்கைகளில் வெளியிடப்படுவதாகவும், இன்றைய தேதி நிலவரப்படி 880.52 டன்களாகவே இருப்பு தொடர்வதாகவும் தெரிவித்தது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





