அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா தேவி கோவிலுக்கு, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் அடிக்கடி சென்று வழிபடத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பயணங்கள் தற்போது பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

குவஹாத்தியின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் மலையில் அமைந்துள்ள இந்தக் கோவில், 51 சக்தி பீடங்களில் பழமையானதும் புனிதமானதுமாக போற்றப்படுகிறது. தாந்திரீக சக்தி வழிபாட்டின் முக்கிய மையமாகவும் இது கருதப்படுகிறது; வடகிழக்கு மாநில மக்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நீண்ட காலமாக இங்கு வந்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

சமீப காலங்களில் தென் மாநிலங்களில் இருந்து, குறிப்பாக அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் வருகை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள டி.கே. சிவகுமார் காமாக்யா தேவியின் தீவிர பக்தர் என்றும், மாதம் ஒருமுறை தரிசனம் செய்வதாகவும் கூறப்படுகிறது. தனது அரசியல் உயர்வுகளுக்கு தேவியின் அருளே காரணம் என அவர் நம்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் கோவிலில் வழிபடுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். சில நாட்களுக்கு முன் அவர் அசாம் சென்று காமாக்யா கோவிலில் வழிபட்ட பிறகே டில்லி சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் அடிக்கடி இக்கோவிலுக்கு செல்வதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை குடும்பத்துடன் அங்கு வழிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.