உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த வீரர் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும் இந்தத் தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் மலேசிய–இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கேரள மாநிலம் கண்ணூர் பூர்விகமாகக் கொண்ட 19 வயதான தஷின் முகமது ஜம்ஷித் கத்தார் தேசிய அணிக்காக தேர்வாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் வெளியிட்ட அறிக்கையில், 2026 பிபா உலகக் கோப்பை நெருங்கும் சூழலில் இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் சர்வதேச அரங்கில் கவனம் பெறுவது இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆந்திரப் பெற்றோருக்கு பிறந்து பின்னர் மொரிஷியஸ் வழியாக பிரான்சில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த விகாஷ் தோரசூ 2006 உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணிக்காக விளையாடியதை நினைவுகூர்ந்த அவர், வட அமெரிக்காவில் நடைபெறும் தொடருக்கு செல்லும் இளம் வீரர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.





