திருவனந்தபுரம்: அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் முடிவிலும் ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் ஐந்து சரணங்களையும் முழுமையாகப் பாட வேண்டும் என்று வற்புறுத்துவது தேவையற்றது; அது பார்வையாளர்களுக்கு சுமையாகும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகம், அரசு மற்றும் பள்ளி–கல்லூரி நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாடுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திய பின்னணியில் அவர் இந்தக் கருத்தை கூறினார். இதன் தொடர்ச்சியாக பா.ஜ. ஆளும் மாநிலங்களிலும், ராஜ்பவன் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பாடல் முழுமையாகப் பாடப்படுவதாகவும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இது ஒரே மாதிரியாக பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானோருக்கு முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே மனப்பாடமாக இருக்கும் நிலையில், ஐந்து சரணங்களையும் இருமுறை எழுந்து நின்று கேட்க வேண்டுமென எதிர்பார்ப்பது தேவையற்ற திணிப்பாகும்; பரிச்சயமில்லாத நீண்ட பாடல் பார்வையாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்று தரூர் கூறினார்.

மேலும், ‘வந்தே மாதரம்’ பாடுவது விருப்பத் தேர்வாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கேரள முதல்வர் சதீசன் எடுத்துள்ளதாகவும், ஆனால் கவர்னர் அர்லேக்கருக்கு இதில் வேறுபட்ட கருத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து பார்லிமென்டில் எந்தச் சட்டமும் இயற்றப்படாததால், சட்டரீதியான தீர்வு தேவை என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், பா.ஜ. செய்தித்தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, ‘வந்தே மாதரம்’ முழு வடிவத்தைப் பாடுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பதாக குற்றம்சாட்டி, தரூரின் கருத்தை கண்டித்தார்.