சென்னை: தேர்தலுக்குப் பின் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பை இழந்த நிலையில், அதற்கான உண்மையான காரணங்களை ஆராயாமல் வி.சி.க.வை குறிவைத்து விமர்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தி.மு.க.வை குறை கூறினார்.
வெளியிட்ட வீடியோ பதிவில், மதச்சார்பின்மை தன் கோட்பாடு என்றாலும் மதம் சார்ந்த மக்களை அன்னியப்படுத்தி அரசியல் செய்ய முடியாது என்றார். அதனாலேயே திருப்பதி சென்றதாகவும், சர்ச், மசூதி, கோவில் போன்ற இடங்களுக்கு அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறினார். கடவுள் நம்பிக்கையும் “சனாதனம்” என்பதும் வேறு என குறிப்பிட்டு, பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வை வலியுறுத்தும் நடைமுறைகளையே விமர்சிப்பதாக தெரிவித்தார்.
மேலும், ஒன்றரை ஆண்டுக்கு முன்பே முதல்வர் விஜய் த.வெ.க. கூட்டணிக்கு அழைத்ததாகவும், அப்போது சென்றிருந்தால் வி.சி.க. இன்னும் பெரிய சக்தியாக வளர்ந்திருக்கும் என்றும் கூறினார். பதவி ஆசை இருந்திருந்தால் பா.ஜ. கூட்டணியில் மத்திய அமைச்சராகி இருக்க முடியும் என்றும், துணை முதல்வர்/முதல்வர் என்ற பேச்சுகளுக்கும் தாம் மயங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் தேர்தலை சந்தித்து இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதை கூட்டணியின் வெற்றியாகவே பார்க்க வேண்டும் என்றார். ஆனால் அறம் சார்ந்து சிந்தித்ததால் த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்ததாகவும், எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறாவிட்டாலும் த.வெ.க. அமைச்சரவையில் சேர வாய்ப்பு இருந்ததாகவும் கூறினார்.
இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரவும் பேச்சுகளை மறுத்த அவர், எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று 100 சதவீதம் உறுதியாக கூறினார். இதை ஏற்கனவே முதல்வர் விஜயிடம் தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார்.





