மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் ஆட்சியை இழந்த பின்னர், திரிணமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) கட்சிக்குள் மம்தா பானர்ஜிக்கு எதிரான அதிருப்தி வெளிப்படையாகத் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்கட்டாவில் பரவும் தகவலின்படி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. ரிடாபிரடா பானர்ஜியை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்த வேண்டும் எனக் கூறி, சுமார் 50 டி.எம்.சி. எம்.எல்.ஏ.க்கள் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது மம்தா அறிவித்த தேர்வுக்கு நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது.
இந்தப் பிளவு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக சோபன்தேவ் சட்டோபாத்யாவை ஆதரித்து சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தைச் சுற்றிய சர்ச்சைக்குப் பிறகு தீவிரமடைந்தது. அந்தக் கடிதத்தில் பல எம்.எல்.ஏ.க்களின் கையொப்பங்கள் போலியாக இடப்பட்டுள்ளதாக ரிடாபிரடா பானர்ஜி மற்றும் சந்தீபன் சாஹா புகார் அளித்ததைத் தொடர்ந்து, விவகாரம் சி.ஐ.டி. விசாரணைக்கு சென்றது. விசாரணையில் சில எம்.எல்.ஏ.க்கள், கடிதத்தில் உள்ள கையொப்பம் தங்களுடையது அல்ல என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கை எனக் கூறி ரிடாபிரடா பானர்ஜி மற்றும் சந்தீபன் சாஹாவை கட்சி மேலிடம் உடனடியாக நீக்கியது. இந்த நீக்க நடவடிக்கை கட்சிக்குள் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதாகவும், டி.எம்.சி.யின் 80 எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மையினர் ரிடாபிரடாவுக்கு ஆதரவாக திரளக்கூடும் எனவும் பேசப்படுகிறது.
கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த தலைவர் ரிஜு தத்தா, 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒரு ஹோட்டலில் ரகசியமாக கூடியதாகவும், தாங்களே “உண்மையான” டி.எம்.சி. எனக் கூறி சபாநாயகரிடம் பட்டியலை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள டி.எம்.சி. எம்.பி.க்கள் பா.ஜ.க.வில் சேரத் தயாராக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், கட்சி பிளவு ஏற்படுமா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.





