சென்னை வானிலை மையம், இன்றும் நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. இதே நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு மஞ்சள் அலெர்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜூன் 5 மற்றும் 6 தேதிகளில், திருநெல்வேலி மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. மேலும் திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் ஏற்படலாம் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மலைப்பகுதிகள் உள்ளிட்ட நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 6 வரை மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில், இடையிடையே 60 கி.மீ வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





