தமிழகத்தில் 2027 மார்ச் மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வார்டு மறுவரையறை பணிகளை விரைவாக நிறைவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மாநில தேர்தல் ஆணையர் மற்றும் எல்லை மறுவரையறை ஆணையத் தலைவர் ஜோதி நிர்மலா சாமி தலைமையில், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் எல்லை மறுவரையறை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இதில் எல்லை நிர்ணயம் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 177 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிர்ணயிப்பதும், அதனுடன் தொடர்புடைய வார்டு எல்லைகளை மறுவரையறை செய்வதும் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க தலைவர் உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி அரசுக்கு பரிந்துரை அளிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், கிராம உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து சிறப்பு அதிகாரிகள் மூலம் நிர்வாகம் நடைபெற்று வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2027 பிப்ரவரி வரை உள்ளதால், அதற்குள் மறுவரையறை பணிகளை முடித்து 2027 மார்ச்சில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.





