வாஷிங்டன்: ஈரான் போர் தொடர்பான அமைதி பேச்சுகளை முன்னெடுக்க அமெரிக்கா முயன்று வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் கடுமையாக கண்டித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தகவலின்படி, ஈரானுடனான போரை அமைதி ஒப்பந்த பேச்சுக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஈரானுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படும் ஹெஸ்பொல்லாவை குறிவைத்து லெபனானில் நடத்தும் தாக்குதல்களையும் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால், அமைதி பேச்சில் பங்கேற்க ஈரான் மறுத்ததாக அந்த செய்தி கூறுகிறது. இதனால், ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிக்கு இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தடையாக இருப்பதாக டிரம்ப் அதிருப்தியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நடந்த தொலைபேசி உரையாடலில், வழக்கமாக நெதன்யாகுவுக்கு ஆதரவாக பேசும் டிரம்ப் இந்த முறை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி, நெதன்யாகுவின் நடவடிக்கைகள் உலகளவில் இஸ்ரேலின் மதிப்பை பாதிப்பதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கடும் உரையாடலுக்குப் பிறகு, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திட்டமிட்டிருந்த மிகப்பெரிய வான்வழி தாக்குதல்கள் அவசரமாக கைவிடப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.





