வாஷிங்டன்: இந்தியா உட்பட 54 நாடுகளின் பொருட்களுக்கு கூடுதலாக 12.5% இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் சில பொருட்களில் ‘கட்டாய உழைப்பு’ நடைமுறைகள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. மேலும், கட்டாய உழைப்பால் தயாரான பொருட்கள் தங்கள் சந்தைகளில் நுழைவதைத் தடுக்க தேவையான தடைகளை அறிமுகப்படுத்தி, திறம்பட அமல்படுத்தத் தவறியதாகக் கூறி இந்த நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டதாக USTR தெரிவித்துள்ளது.
இதற்கு இந்தியா கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், கூடுதல் வரி விதிக்கும் முடிவை கைவிடுமாறு அமெரிக்காவை வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா, சீனா, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளதாக USTR தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கொண்ட நாடுகள் கட்டாய உழைப்பைத் தடுக்கும் வகையில் ஓரளவு நடவடிக்கை எடுத்திருந்தால் 10% கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நோக்கில் அமெரிக்காவின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர்கள் டெல்லியில் மூன்று நாட்கள் தங்கி இந்திய அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.





