சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ராஜ்யசபா எம்பியாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலியிடத்திற்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மை ஆதரவுடன் இருப்பதால், அதன் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் எனக் கருதப்பட்டது. ஆனால் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியும் இந்த ராஜ்யசபா இடத்தை எதிர்பார்த்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முதல்வரை சந்தித்து பேசினார். தொடர்ந்து இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ராஜ்யசபா சீட்டை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து முதல்வர் விஜயை சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்த ராஜ்யசபா இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.