தெற்கு டில்லியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாள்வியா நகரின் ஹவுஸ் ராணி பகுதியில் செயல்படும் “ப்ளரிஷ் ஸ்டே பி அண்டு பி” என்ற ஆறு மாடி கட்டடத்தில் இந்த சம்பவம் நடந்தது.
நேற்று காலை 8.45 மணியளவில் விடுதியின் உணவகத்தில் தீ ஏற்பட்டதாகவும், சில நிமிடங்களில் கட்டடம் முழுவதும் வேகமாக பரவியதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டினர் உட்பட 70க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியிருந்தனர்; அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்களும் வாடகைக்கு தங்கியிருந்ததாக தகவல்.
தீ பரவியதும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அருகிலிருந்த மெத்தை கடைக்காரர்கள் மெத்தைகளை கொண்டு வந்து விடுதியின் முன்புறம் விரித்ததால், நான்காம் மற்றும் ஐந்தாம் மாடிகளில் இருந்து கீழே குதித்த சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் 60க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால் 21 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்; இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் 10க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சம் உள்ளது. உயிரிழந்தவர்கள் மத்திய ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது; விடுதியில் நுழைய ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்ததால் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனிடையே டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவானதாக கூறப்படும் கட்டட உரிமையாளர் லாவ்கேஷ் பஜாஜை லுக் அவுட் நோட்டீஸ் மூலம் தேடி கைது செய்தனர்.





