மற்றொரு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது சரியல்ல; அது ஒரு இயக்கத்தின் தனித்த அடையாளத்தை பாதிக்கும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வியாழக்கிழமை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக சின்னத்தில் போட்டியிட்டது “துரதிர்ஷ்டவசமானது” என்று முன்பு கூறியது உண்மைதான் என்றார். கொடியும் சின்னமும் கட்சியின் அடிப்படை அடையாளங்கள்; பிற கட்சியின் சின்னத்தில் நிற்கும் போது அந்த இயக்கத்தின் தனித்துவம் மங்கிவிடும் எனவும் கூறினார்.
மேலும், ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நிலையில், முதலில் தாம் சேர்ந்திருந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, போட்டியிடும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மாற வேண்டும் என்ற நடைமுறையையும் அவர் குறிப்பிட்டார்.
மதிமுக ஏன் திமுக சின்னத்தில் போட்டியிட்டது என்ற கேள்விக்கு, கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிர்பந்தம் காரணம் என அவர் விளக்கினார். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட மனவேதனை தங்களின் துரதிர்ஷ்டவசம் என்றும், தலைமை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் “ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது” என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.





