தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு (சார்பதிவாளர்) அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதன்கிழமை ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பல மாவட்டங்களில் மொத்தம் 60 அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடந்தபோது, அலுவலக வாயில் மூடப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பத்திரப்பதிவு பணிக்காக வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விருதுநகர்–மதுரை சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும், சாத்தூரில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கோவையில் தொண்டாமுத்தூர் மற்றும் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை குழுக்கள் சோதனை செய்தன.

திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் மூன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை தொடர்வதாகவும் கூறப்பட்டது.

இதுபோல் தர்மபுரி மற்றும் தேனி மாவட்டம் போடி சார்பதிவாளர் அலுவலகத்திலும் திடீர் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.