சென்னையில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டதாக வெளியான தகவல்களில், இது சாதாரண திருட்டல்ல; யாரையோ காப்பாற்றும் சதி இருக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) குற்றம்சாட்டினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், மின்வாரிய தலைமையகத்தில் முக்கிய தகவல்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணவில்லை என செய்திகள் வருவதாக குறிப்பிட்டார். “தூயசக்தி” என தங்களை முன்னிறுத்தும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போனதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.
நடு இரவில் திருடர்கள் வந்து திருடும் அளவுக்கு அலட்சியம் காட்டப்பட்டதா என்றும், இந்த சம்பவத்தின் பின்னால் உள்நோக்கம் இருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும், “சக்தி” குறித்து பேசும் ஒரு கட்சியை காப்பாற்ற முயற்சி நடக்கிறதா எனவும் சந்தேகம் வெளியிட்டார்.
இந்த ஹார்ட் டிஸ்க் திருட்டு தொடர்பாக சிபிஐ மூலம் முறையான விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தினார்.




