சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வங்கதேச சிறுவனுக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசின் உடலுறுப்பு மாற்று அங்கீகார குழுவை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

அதோனு சாஹா என்ற சிறுவனுக்கு அவரது தாய் மோனிகா ராணி சாஹா சிறுநீரக தானம் வழங்க முன்வந்த நிலையில், தாய்–தந்தை இடையிலான உறவை நிரூபிக்கவில்லை எனக் கூறி குழு ஒப்புதல் மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தாய்–மகன் உறவை நிரூபிக்க வங்கதேச அரசு வழங்கிய தேசிய அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், குடும்ப சான்றிதழ், பாஸ்போர்ட், விசா, கல்வி சான்றிதழ்கள், டி.என்.ஏ. உள்ளிட்ட பல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

இந்தியா ‘ஹேக்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடாக இருப்பதால், பிற உறுப்பு நாடுகள் வழங்கும் இத்தகைய ஆவணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும், இந்திய தூதரக சான்று அவசியமில்லை என வெளியுறவுத்துறை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தாய் தன் மகனுக்காக உறுப்பு தானம் செய்யும் நிலையில் தேவையற்ற சந்தேகங்களை எழுப்புவது தவறு என்றும், தாய்க்கும் அவரது கணவருக்கும் இடையிலான உறவுமுறை இந்த அறுவை சிகிச்சைக்கு தொடர்பற்றது என்றும் நீதிபதி தெரிவித்தார். எனவே, சிறுவனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அங்கீகார குழு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.