பொது இடங்களிலும் நீர்நிலைகளிலும் குப்பை கொட்டுவதை எந்த காரணத்தாலும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு சாலைகிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்கும் போது இந்தக் கருத்தை நீதிமன்றம் பதிவு செய்தது. இளையான்குடி பஞ்சாயத்து எல்லைக்குள் உள்ள மயான நிலத்தில் உரிய அனுமதியின்றி குப்பை கொட்டப்படுவதால் அருகில் இயங்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் மாணவர் விடுதிகளுக்கு வரும் மக்கள் துர்நாற்றம், நோய்த்தொற்று அபாயம் போன்ற பாதிப்புகளை சந்திப்பதாக மனுவில் கூறப்பட்டது.

மேலும், மயானம் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்துடன் தொடர்பாக அருகிலுள்ள தனிநபர் நிலத்திலும், சமுத்திரனேந்தல் கண்மாயிலும் சட்டவிரோதமாக குப்பை கொட்டப்பட்டதாகவும் மனுதாரர் தெரிவித்தார். இதுகுறித்த வழக்கில் கடந்த பிப். 26 அன்று குப்பை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டது.

விசாரணையில், மயான பகுதியைத் தவிர பிற இடங்களில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு இருப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது. நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு, முன்பே உத்தரவிட்டும் தனி இடம் இறுதியாக தேர்வு செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டு, அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பையை பேரூராட்சி நிர்வாகம் முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், ஜூன் 25 அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.