குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட போக்சோ சட்டம், பெரியவர்களின் தனிப்பட்ட பகை மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கான கருவியாக மாறக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரித்துள்ளது. குழந்தைப் பருவம் பெரியவர்களின் பழிவாங்கும் போர்க்களமாக மாறக்கூடாது என்றும், குழந்தையின் கண்ணியம், கல்வி, மனநலப் பாதுகாப்பு ஆகியவற்றையும் உறுதி செய்வதே சட்டத்தின் நோக்கம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

திருச்சி, துாத்துக்குடி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரிய 4 மனுக்கள் ஒன்றாக விசாரிக்கப்பட்டன. பதிவுகளை ஆய்வு செய்ததில், குடும்பத் தகராறு, சொத்துத் தகராறு, வழக்கறிஞர்களின் மிரட்டல், கிராமப் பகை போன்ற காரணங்களால் அப்பாவி சிறுமிகளை பயன்படுத்தி பொய் புகார்கள் உருவாக்கப்பட்டதாகத் தெரிய வந்ததாக நீதிபதி எல். விக்டோரியா கவுரி தெரிவித்தார்.

திருச்சியில் ஒரு டாக்டருக்கு எதிரான வழக்கில், பெண் வழக்கறிஞரின் மிரட்டல் மற்றும் துாண்டுதலால் சிறுமி புகார் அளித்ததாக மனநல ஆலோசகரின் அறிக்கை கூறியதை நீதிமன்றம் சுட்டியது. மேலும் அந்த வழக்கறிஞரின் கேரள பார் கவுன்சில் பதிவுச் சான்றிதழில் முறைகேடுகள் இருப்பதும் குறிப்பிடப்பட்டு, அந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

துாத்துக்குடியில் குடும்பப் பகை காரணமாக சிறுமியை வற்புறுத்தி புகார் அளிக்க வைத்தது உறுதியானதால் வழக்கு ரத்து செய்யப்பட்டது; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மறுவாழ்வு மற்றும் தொடர்ச்சியான மனநல ஆலோசனைகளை அரசு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. புதுக்கோட்டையில் தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவருக்கு “பாடம் புகட்ட” போக்சோ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வழக்கு ரத்து செய்யப்பட்டது.

உசிலம்பட்டியில் கிராமப் பகை மற்றும் முன்விரோதம் காரணமாக போட்டிப் புகாராக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்தது. அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உரிய பரிசீலனை இன்றி இயந்திரத்தனமாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது எனக் கூறி வழக்கு ரத்து செய்யப்பட்டதுடன், பொய் புகார் அளித்தவர்கள் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு பயிலரங்கம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பயிற்சித் திட்டத்தை நடத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சமூக நலத்துறை மற்றும் சட்டத்துறையுடன் இணைந்து உள்துறை இந்த பயிற்சியை நடத்த வேண்டும்; எஸ்.பி. அந்தஸ்து முதல் பெண் காவலர்கள் வரை, மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்களுக்கும் குழந்தைகளின் உளவியல், கண்ணியத்துடன் கையாளும் முறை, முறையான விசாரணை, பொய் புகார்களை கையாள்வது உள்ளிட்ட போக்சோ சட்டப் பிரிவுகள் குறித்து பயிற்சி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.