பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் முன்மொழியப்பட்ட அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை; மத்திய அரசின் அனுமதி தான் தேவை என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டை கர்நாடக அரசு மீண்டும் வலியுறுத்தி வருகிறது. அணைக்கான பூமி பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய சிவகுமார், கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக தமிழக தரப்பு மேகதாது திட்டத்தை எதிர்த்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதாகவும் கூறினார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையமும் மத்திய அரசும் கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை பெற்றுள்ளதாகவும், அதை அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
இப்போது இந்த விவகாரம் மத்திய அரசின் கைகளில் இருப்பதாக கூறிய அவர், தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை என மீண்டும் வலியுறுத்தினார். தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த விவகாரத்தில் தங்கள் அரசியலைத் தொடர்வார்கள் என்றும் அவர் கூறினார்.





