பிரதமர் நரேந்திர மோடி எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, பல மத்திய அமைச்சர்கள் தனித்தனி வாகனங்களில் வராமல், ‘கார்பூல்’ முறையில் பகிர்ந்து கார் பயணத்தில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேற்காசியப் போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெட்ரோல்-டீசல் இறக்குமதியை குறைத்து அன்னிய செலாவணிச் சுமையை குறைக்கும் நோக்கில், பொதுமக்கள் தனியார் வாகனப் பயன்பாட்டை குறைத்து பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். வீட்டிலிருந்தே வேலை செய்ய இயலும் நிறுவனங்கள் அந்த முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், தன் கான்வாயில் உள்ள வாகன எண்ணிக்கையையும் அவர் குறைத்ததாக கூறப்படுகிறது.
இந்த பின்னணியில், டில்லியில் சில அமைச்சர்கள் மெட்ரோவில் பயணம் தொடங்கியதாகவும், சில மாநிலங்களில் மின் வாகனங்களுக்கு மாறியதாகவும் தகவல் வெளியானது. மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இருசக்கர வாகனத்தில் பயணிக்கத் தொடங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டில்லியில் பிரதமர் அலுவலக வளாகமான ‘சேவா தீர்த்’ பகுதியில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு வந்த அமைச்சர்களும் தனித் தனி கார் பயணத்தை தவிர்த்தனர். நிதின் கட்கரி, ஜே.பி. நட்டா, கிரண் ரிஜிஜு, ராஜீவ் ரஞ்சன் சிங், மனோகர் லால் கட்டார், பிரஹலாத் ஜோஷி, கஜேந்திர சிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, சிவராஜ் சிங் சவுகான், சி.ஆர். பாட்டீல், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் குழுக்களாக இணைந்து வெவ்வேறு கார்களில் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. முந்தைய கூட்டத்தில் ‘ஒரே இடத்துக்கு செல்லும் போது எத்தனை பேர் ஒரே காரில் வருகிறீர்கள்?’ என பிரதமர் அமைச்சர்களிடம் கேட்டதைத் தொடர்ந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.





