பெங்களூரு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மதுரையைச் சேர்ந்தவர்.
காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் ஜூன் 3 அன்று கர்நாடகத்தின் புதிய முதல்வராக முறைப்படி பொறுப்பேற்றார். அவருடன் துணை முதல்வர் பரமேஸ்வரா உள்ளிட்ட 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஆட்சி மாற்றத்தையடுத்து கர்நாடகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மாற்றம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
2008-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற ராஜேந்திர சோழன், டி.கே. சிவகுமார் துணை முதல்வராக இருந்தபோது அவரின் செயலாளராக பணியாற்றியுள்ளார். தற்போது சிவகுமார் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் மீண்டும் அதே பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கர்நாடக மின்கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளராக துஷார் கிரிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.





