விமான எரிபொருள் (ஏ.டி.எப்.) விலை கடுமையாக உயர்ந்ததால் பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், ரூ.10,000 கோடி மதிப்பிலான “விமான எரிபொருள் விலை நிலைப்படுத்தல் நிதியம்” அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்காசிய போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத் தொடரில் பாதிப்பு நீடித்து, விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் தாக்கத்தில், ஏ.டி.எப். விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து, மார்ச் முதல் மே வரை சுமார் இரண்டரை மடங்கு உயர்ந்ததாக கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் லிட்டருக்கு ரூ.60.50 இருந்த விலை, மே மாதத்தில் சுமார் ரூ.142 ஆக உயர்ந்தது.

இதனால் விமான நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 40% வரை எரிபொருளுக்கே செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டன. தற்காலிக நிவாரணமாக, மத்திய அரசு ஏ.டி.எப். விலைக்கு உச்சவரம்பு விதித்து லிட்டருக்கு ரூ.75.60 என நிர்ணயித்தது. ஆனால் இந்த உச்சவரம்பால் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, இப்போது புதிய நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்த நிதியம் “சுழற்சி நிதியம்” ஆக செயல்படும் என்றார். விலை உயரும்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்; விலை குறையும்போது வித்தியாச தொகை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வசூலித்து மீண்டும் நிதியத்தில் சேர்க்கப்படும். திட்டம் முதற்கட்டமாக 36 மாதங்கள் அமலில் இருக்கும்; ஆண்டுதோறும் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும். மேலும், விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நிதியமைச்சகத்தின் செலவினத் துறை பிரதிநிதிகள் இடம்பெறும் உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிதியத்தால் உள்நாட்டு விமான நிறுவனங்களின் எரிபொருள் செலவு அழுத்தம் குறையும்; விமானத் துறையை நம்பியுள்ள 77 லட்சம் வேலை வாய்ப்புகள் பாதுகாக்கப்படும்; பயணிகள்மீது நேரடியாக சுமத்தப்படும் கட்டண உயர்வும் கட்டுப்படும் என அரசு தரப்பு கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தான் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டுள்ள சூழலில், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான சர்வதேச வழித்தடங்களில் லாபகரமாக சேவை தொடரவும் இந்த நிலைப்படுத்தல் நிதியம் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டது.