புதுடில்லி: உண்மையான கல்வித் தகுதியை மறைத்து வேலை பெறுவது, அந்த வாய்ப்புக்காக உரிமையுடன் காத்திருக்கும் பிறரின் வாய்ப்பை பறிப்பதற்குச் சமம் என சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.

சிண்டிகேட் வங்கியில் தற்காலிக வங்கி உதவியாளராக பணியாற்றிய ஒருவர், தாம் பட்டதாரி என்பதைக் கூறாமல், 10ம் வகுப்பு வரை கல்வித் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட பதவியில் நியமனம் பெற்றதாக வழக்கில் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமானுல்லா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தகுதியை மறைத்துச் சேர்ந்ததாகக் கருதி அந்த ஊழியரின் பணிநீக்கத்தை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

குறைந்த கல்வித் தகுதி உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில், அதிக தகுதி உள்ளவர்கள் தங்களின் தகுதியை மறைத்து நுழைவது, உண்மையில் தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு அந்த வேலை வாய்ப்பை மறுப்பதற்குச் சமம் என நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், குறைந்த கல்வித் தகுதி உள்ளவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பதவிகளுக்கு, உயர்கல்வித் தகுதி உடையவர்களை பரிசீலிக்க முடியாது; குறிப்பாக அந்த தகுதிகள் மறைக்கப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாதது என அமர்வு தெரிவித்தது.