மதுரை: டாஸ்மாக் நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங் ஜூன் 4 அன்று மண்டல அலுவலகங்களில் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், இது புதிய அமைச்சருக்கு தெரியாமல் அதிகாரிகள் முன்னெடுப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் 2003 முதல் டாஸ்மாக் சில்லரை கடைகளை அரசு நேரடியாக நடத்தி வருகிறது. கடைகளை இயக்க மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் ஆகிய பணியிடங்களுக்கு கல்வித் தகுதி மற்றும் டெபாசிட் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும் ஊழியர்கள் நினைவூட்டினர்.
2018ல் 500 கடைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து வேலை இழந்த கடை ஊழியர்களை பயன்படுத்தும் நோக்கில், டாஸ்மாக் துறையில் கிளார்க் சார்ந்த பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பட்டப்படிப்பு தகுதியுள்ள சுமார் 8,000 பேர் பங்கேற்றதாகவும், அவர்களில் 500 பேர் ‘இளநிலை உதவியாளர்’ ஆக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது உதவியாளர் பணியிடங்களில் ஆயிரத்துக்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை 200 எனக் குறைத்துக் காட்டி அதற்கேற்ப பதவி உயர்வு வழங்க திட்டமிடப்படுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால் ஒரே தகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
எனவே, அதிகாரிகள் முன்னெடுக்கும் கவுன்சிலிங்கை ரத்து செய்து, பாரபட்சமின்றி காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





