திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் உரிமம் புதுப்பிப்பதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டும் பெற்றும் உள்ளதாக கூறப்படும் பெண் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சேரன்மகாதேவியைச் சேர்ந்த மூக்காண்டி பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். அதற்கான பணப்பரிவர்த்தனை உரிமத்தை புதுப்பிக்க வி.ஏ.ஓ. இதயக்கனியிடம் அவர் விண்ணப்பித்திருந்த நிலையில், உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மூக்காண்டி திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. எஸ்காலிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சேரன்மகாதேவி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் போலீசார் மறைந்து கண்காணித்து வலைவீசினர்.

அப்போது, மூக்காண்டி ரூ.10 ஆயிரத்தை வி.ஏ.ஓ.வின் உதவியாளராக செயல்பட்டதாக கூறப்படும் புரோக்கர் வெங்கடேசன் (34) என்பவரிடம் வழங்கினார். உடனடியாக போலீசார் வெங்கடேசனையும், வி.ஏ.ஓ. இதயக்கனி (32) என்பவரையும் கைது செய்தனர்.

இருவரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாகவும், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.