திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் தனிமையில் இருக்கும் ஜோடிகளை நோட்டமிட்டு, அவர்களை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்ததாக ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மே 31 இரவு கிரிவலம் சென்ற 23 வயது பெண், தன் காதலனுடன் தனிமையில் இருந்தபோது ஒரு கும்பல் வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார் அளித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, 16 வயது சிறுவன் உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.

கைது நடவடிக்கையில் ஆறு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த போன்களில் 23 பெண்களின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் ஜோடிகள் தனிமையில் இருந்தபோது எடுத்த காட்சிகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில், கும்பல் இரவு நேரங்களில் ஒதுக்குப்புற பகுதிகளில் பைக்கில் சுற்றி வந்து, யாராவது சிக்கினால் நண்பர்களை வரவழைத்து குழுவாக மிரட்டி பணம் பறிப்பது, பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுப்பது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

சிக்கியவர்களில் பலர் கள்ளக்காதல் தொடர்புடையவர்கள் என்பதால் புகார் அளிக்காமல் மறைத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். வீடியோவில் உள்ள பெண்கள் யார், எவ்வளவு பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டன என்பதைக் கண்டறிய விசாரணை தொடர்கிறது.