சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.18,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தமிழக அரசு மற்றும் லார்சன் & டூப்ரோ (எல்&டி) லிமிடெட் இடையே மேற்கொள்ளப்பட்டது.
அரசுத் தகவலின்படி, மூன்று திட்டங்களை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் மூலம் மொத்தம் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மின்னணு உற்பத்தி மற்றும் கப்பல் கட்டுமானத் துறை விரிவாக்கம் ஆகிய துறைகள் இதில் இடம்பெறுகின்றன.
முதல் திட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.15,000 கோடி முதலீட்டில் தகவல் தரவு மைய விரிவாக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது; இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இரண்டாவது திட்டமாக கோயம்புத்தூரில் ரூ.2,500 கோடி முதலீட்டில் மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது; இதில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
மூன்றாவது திட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி எல்&டி கப்பல் கட்டும்தள விரிவாக்கம் ரூ.1,100 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது; இதன் மூலம் 5,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. 2036க்குள் தமிழக பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை நோக்கி இந்த முதலீடுகள் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்பாடுகள் வளர்ச்சி பெறுவதுடன் மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பு மேம்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் காட்டுப்பள்ளி திட்டம் கடலோர காற்றாலைத் துறைக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.





