சென்னை: தமிழகத்தில் காலியான ராஜ்யசபா இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்க, ராகுல் காந்தி சார்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் மற்றும் முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் காங்கிரசுக்கு தமிழகத்திலிருந்து மேலும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கவுள்ளது.
முன்னாள் அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம், மயிலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்திற்கான தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் த.வெ.க. (107 எம்.எல்.ஏ.) சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாக இருந்த நிலையில், அந்த இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்குமாறு மேலிடம் கோரிக்கை வைத்தது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் முதல்வர் விஜயை சென்னையில் சந்தித்து பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், பார்லிமென்டில் முதல் முறையாக நுழைய வாய்ப்பாக இருக்கும் என்பதால் இடத்தை விட்டுத் தரக் கூடாது என்ற கருத்தும் த.வெ.க.வில் எழுந்தது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் கோவாவிலிருந்து சென்னை வந்து தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து, ராகுல் காந்தியின் விருப்பத்தை தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரசுக்கு அந்த ராஜ்யசபா இடம் ஒதுக்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்தார். த.வெ.க. ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகியதால், வேட்பாளர் தேர்வு குறித்து கவனம் திரும்பியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் டெல்லி மேலிடத்தில் வாய்ப்பு கோரி வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. த.வெ.க.–காங்கிரஸ் கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் என்றும், முதல்வர் விஜய்க்கும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுவதால், பிரவீன் சக்கரவர்த்தி முன்னணி தேர்வாக பார்க்கப்படுகிறார்.




