மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு அரசியல் நெருக்கடி உருவாகும் வகையில் பேச வேண்டாம் என காங்கிரஸ் மேலிடத்திடம் த.வெ.க. தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கர்நாடகத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் பதவி ஏற்றுள்ள நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என அவர் சமீப காலமாக தொடர்ந்து பேசிவருகிறார். இது தமிழக டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு முக்கியமான விவகாரமாக பார்க்கப்படுகிறது.
கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் அமைதியாக இருப்பதாகவும், ஆனால் த.வெ.க. அரசு காங்கிரஸ் ஆதரவுடன் இருப்பதால் அணை கட்டுவதை தடுக்க முடியாது என்ற பொருளில் சிவகுமார் பேசுவது தமிழக அரசுக்கு அழுத்தத்தை உருவாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் டெல்டா விவசாயிகள் ஏற்கனவே அரசின் மீது அதிருப்தியில் உள்ள நிலையில், இத்தகைய பேச்சுகள் கூட்டணி உறவுக்கு நல்லதல்ல என த.வெ.க. தெரிவித்ததாக கூறினார். மேகதாது தொடர்பான அரசியலை கர்நாடகத்திலேயே வைத்துக்கொண்டு, தமிழக முதல்வரை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் கருத்துகள் தெரிவிக்க வேண்டாம் என காங்கிரஸ் மேலிடத்திடம் வலியுறுத்தியதாகவும், அதன்படி சிவகுமாருக்கு மேலிடம் அறிவுரை வழங்கியதாகவும் அவர் கூறினார்.




