பாஜ முன்னாள் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்குவது தொடர்பான தனது முடிவை இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீப நாட்களாக டில்லியில் முகாமிட்டுள்ள அவர், பாஜ மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனைகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பி.எல். சந்தோஷை சந்தித்து தனது முடிவு குறித்து பேசினார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து கட்சியிலிருந்து விலகும் எண்ணத்தை தெரிவித்ததுடன், அதற்கான கடிதத்தையும் வழங்கியதாக வட்டாரங்கள் கூறுகின்றன. மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து, பாஜவிலிருந்து விலகுவது மற்றும் புதிய இயக்கம் தொடங்குவது குறித்து எடுத்துரைத்து ஆசியும் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 4 அன்று டில்லியில் பிரதமர் மோடியை அண்ணாமலை சந்திப்பார் என எதிர்பார்ப்பு இருந்தாலும், அந்த சந்திப்பு நடைபெறவில்லை.
இதற்கிடையில், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், இன்று மதியம் 12 மணியளவில் சமூக ஊடகங்கள் வழியாக அனைவரையும் சந்தித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் இருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.





