பாஜ தலைமையால் தனது ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், முன்னாள் தமிழக பாஜ தலைவர் கே. அண்ணாமலை தனது அரசியல் பயணம் இனி புதிய திசையில் செல்லும் என கூறினார். சமூக வலைதள நேரலையில் பேசிய அவர், 2020 ஆகஸ்ட் 25-ஆம் தேதி பாஜவில் இணைந்ததாகவும், தமிழக மக்களுக்காக ஆறு ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
தனக்கு பெரிய இலக்குகள் உள்ளதால் வேறு பாதையில் பயணம் செய்ய வேண்டியதாக இருப்பதாகவும், அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய “புதிய அரசியல்” உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாஜ தலைவர்களிடம் பண்போடு தெரிவித்து இயக்கத்திலிருந்து வெளியே வந்ததாகவும் அண்ணாமலை கூறினார். தலைமையை சந்திக்க டில்லி வந்தது தமிழர் பண்பின் வெளிப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பாஜவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து தனது இயக்கத்தில் இணைய அழைப்பு விடுத்ததாக அண்ணாமலை நினைவுகூர்ந்தார். கோவிட் காலச் சூழல் மற்றும் பாஜ தலைவர் பி.எல். சந்தோஷ் அவர்களிடம் அளித்த வாக்குறுதி காரணமாக அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை என்றும், சில யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதை கூறுவதாகவும் தெரிவித்தார்.
தமிழக உரிமைகள் தொடர்பான விஷயங்களில் தாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை என்றும், மாநிலத்திற்கு எதிரானதாக கருதும் திட்டங்களை தொடர்ந்து எதிர்த்ததாகவும் அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை உள்ளதாகவும், அவருக்கு தாம் “பிரச்னையாக” இருக்கக்கூடாது என்பதால் கட்சியிலிருந்து விலக முடிவு செய்ததாகவும், கடந்த 18 மாதங்களாக தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக “புதிய பாதை, புதிய இயக்கம்” தொடங்க விருப்பம் உள்ளதாக கூறிய அண்ணாமலை, தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அதில் மாற்றமில்லை என அறிவித்தார். நிரந்தர எம்எல்ஏ, நிரந்தர அமைச்சர் என்ற மனநிலையை உடைக்க வேண்டும் என்றும், கோவையில் அரசியல் பயிற்சிக்காக ‘சென்டர் ஃபார் எதிக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ்’ என்ற மையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.





