டில்லியில் கடந்த ஐந்து நாட்களாக முகாமிட்டிருந்த அண்ணாமலை, இன்று இரவு 7 மணிக்கு சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவில் ஏற்பட்ட அதிருப்தியை காரணமாகக் காட்டி, கட்சியிலிருந்து விலக விருப்பம் இருப்பதை அவர் டில்லி தலைமையிடம் முன்பே தெரிவித்திருந்தார். சட்டசபைத் தேர்தல் வரை கட்சியில் தொடருமாறு மேலிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த பின்னர் டில்லி சென்ற அண்ணாமலை, தலைமையிடம் தனது ராஜினாமாவை அளித்தார். அவரது முடிவை பாஜக ஏற்றுக்கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் தனது விலகல் முடிவை அவர் வெளியிட்டதுடன், “இது நம்ம இயக்கம்” என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பிறகு பலர் அந்த இயக்கத்தில் இணைவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை திரும்பும் அண்ணாமலைக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஆதரவாளர்கள் நகரில் குவியத் தொடங்கியுள்ளதாகவும், வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





