சென்னை திரு.வி.க.நகரில் நடைபெற்ற மாநகராட்சி தொடக்கப் பள்ளி புதிய கட்டட திறப்பு விழா, மேயர் ஆர். பிரியா மற்றும் அந்தத் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி இடையேயான வெளிப்படையான கருத்து மோதலால் பரபரப்பாக மாறியது.

நம்மாழ்வார் பேட்டையில் ரூ.2.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டடங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன. மேயர் ரிப்பன் வெட்ட முயன்றபோது, பின்னால் நின்றிருந்த எம்.எல்.ஏ. பல்லவி திடீரென ரிப்பனை வெட்டியதாக கூறப்படுகிறது.

அதன்பின் மேயர் குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து எம்.எல்.ஏ. விளக்கேற்ற மெழுகுவர்த்தியை வாங்க கையை நீட்டியபோது, மேயர் அதை எம்.எல்.ஏ.வுக்கு வழங்காமல் மாநகராட்சி இணை ஆணையர் கார்ப்பகத்திடம் கொடுத்து விளக்கேற்ற அழைத்தார். இதனால் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ., ஆதரவாளர்களுடன் நிகழ்விடத்தை விட்டு வெளியேறினார்.

பின்னர் மற்றொரு பள்ளியில் நடந்த நிகழ்வில், மேயர் எம்.எல்.ஏ.வுக்கு மெழுகுவர்த்தியை கொடுத்து விளக்கேற்ற அழைத்ததாகவும், ஆனால் எம்.எல்.ஏ. அதை வாங்க மறுத்து, மீண்டும் வற்புறுத்தியபோது கையெடுத்து கும்பிட்டு மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து மேயர், எம்.எல்.ஏ.வை புறக்கணிக்கும் நோக்கம் இல்லை என்றும், நடைமுறைப்படி மேயருக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி விளக்கேற்ற வேண்டும்; அதன் பின்னரே எம்.எல்.ஏ.வுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் விளக்கம் அளித்தார். இதற்கு பதிலாக, தொடக்கம் முதலே தன்னை புறக்கணிக்கும் வகையில் மேயர் நடந்துகொண்டதாகவும், தொகுதியில் நடைபெறும் பணிகளில் திருப்தி இல்லை என்றும் எம்.எல்.ஏ. பல்லவி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.