கனிமவளங்களை சட்டவிரோதமாக கடத்துவதைத் தடுக்கவும், மாநிலத்தின் கனிமவள வருவாயை உயர்த்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கனிமவள கடத்தல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் விரிவாகப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், பிரபு, மரிய வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் தலைமைச் செயலர் சாய்குமார், நிதித்துறை செயலர் சித்திக், நீர்வளத்துறை செயலர் சத்யபிரதசாஹு, இயற்கை வளங்கள் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண் இயக்குனர் சரவணவேல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் மோகன் உள்ளிட்டோரும் கூட்டத்தில் இருந்தனர்.
கூட்டத்தில் முதல்வர் விஜய், நீடித்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் கனிமவளங்களை முறையாக எடுத்து பயன்படுத்த வேண்டும் என்றும், வருவாயை மேம்படுத்தும் நடவடிக்கைகளுடன் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கும் செயல்திட்டங்களையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.





