தமிழகத்தில் ஜூன் 18-ல் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என கட்சி புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம், மயிலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் இந்த இடம் காலியானது. ஆளும் தவெக எளிதாக வெற்றி பெறும் சூழல் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கூட்டணி அடிப்படையில் அந்த ராஜ்யசபா இடத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. இதையடுத்து முதல்வர் விஜய், அந்த இடம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என அறிவித்ததாக தகவல் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கான வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தியின் பெயரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேலும் பிற மாநிலங்களுக்கான ராஜ்யசபா வேட்பாளர்களையும் கட்சி வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து மல்லிகார்ஜூனா கார்கே, பவன் கெரா, மன்சூர் அலிகான்; மத்தியப் பிரதேசத்தில் இருந்து மீனாட்சி நடராஜன்; ராஜஸ்தானில் இருந்து நீரஜ் தங்கி; ஜார்க்கண்டில் இருந்து பிரணவ் ஜா ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.